headlines

img

தந்தை பெரியார் மொழிபெயர்த்த சமதர்ம அறிக்கை

“குடியரசு தொடங்கப்பட்ட 1925 களிலிருந்து ‘வர்க்கம்’ குறித்த பெரியாரின் கட்டுரைகளும் சொற் பொழிவுகளும் நிறைய இடம் பெற்றுள்ளன.  அதன் உச்சமாக அவரின் அயல்நாட்டுப் பயணம் துவங்கும் முன்பே “சமதர்ம அறிக்கை” யின் மொழிபெயர்ப்பினை  தன்னுடைய முகவுரையுடன் 4 .10. 1931தொடங்கி 2.11.1931 வரைக்குமான குடி அரசில் முதல் பாகத்தினை வெளியிட்டுள்ளார்.   இரண்டாவது பாகம்வெளிவருவந்ததற்கான குறிப்பு இல்லை.இந்திய மொழிகளில் முதன் முதலில் தமிழில்,  தந்தைபெரியாரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட சமதர்ம அறிக்கையினை மீண்டும் நூல் வடிவில் தொகுத்துத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்றும் பெரியாரைப் பெரியாராகவே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் விளைந்த எளியமுயற்சி இது” என்ற பசு கவுதமனின் நூன்முகத்தோடு இந்தப் பிரசுரம் தொடங்குகிறது.

“சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மனியர்களாயிருந்தாலும்,  அதற்காக மாநாடு கூடினது லண்டன் பட்டணமாய் இருந்தாலும் , அதற்கு அப்போதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு தேசமாயிருந்தாலும் , அதுமுதல் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் இரஷ்யாவாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமலில்லை. என்ன நியாயம் என்று வாசகர்கள் கேட்பார்களேயானால் அதற்கு நமது சமாதானமானது, எங்கு அளவுக்கு மீறிய,  தாங்க முடியாத கொடுமைநடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டு எழவும்,  சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.  எனவே இந்த நியாயப்படி பார்ப்போமானால் உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்கக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது.  அதனாலேயே அங்கு சமதர்மமுறை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று.

இந்த நியாயப்படி பார்த்தால் அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தைவிட இந்தியாவுக்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும்.  ஆனால் அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கு அனேக விதமாக சூட்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூட்சிக்காரர்கள் இந்தியமக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி,  அறிவு,உலக ஞானம்,  சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு,  கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோக்ஷ சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூட்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச்செய்து வந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கவேண்டியது மாறிரஷியாவுக்கு முதல் ஸ்தானம்  ஏற்பட வேண்டியதாயிற்று” என்று தந்தை பெரியார் எழுதிய முகவுரையின் பகுதியும்,

“இவ்வறிக்கை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் எவ்வளவுதான் ஏற்பட்டுஇருந்தாலும் அவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய  நிலைமைக்கும் மிக்கப் பொருத்தமானதாகவே இருந்து வருவது அவ்வறிக்கையின் விசேஷத்திற்கு ஒரு காரணமாகும்”  என்ற நிர்ணயிப்பும்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் உள்ளடக்கத்தையும் தேவையையும் கூறுகின்றன.1931 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் ‘சமதர்ம அறிக்கை’ என்ற பெயரில் தந்தை பெரியார் மொழியாக்கம் செய்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிஅறிக்கையின் முதல் பகுதி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.  சிவப்பு புத்தக வாசிப்பின் ஒரு பகுதியாக இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருப்பது கூடுதல் சிறப்பு.  ஆவணப்படுத்தும் நூல் என்பதோடு சமூகமாற்றத்திற்குத் தேவையான அறிவை செம்மைப்படுத்தும் நூலாகவும்  கொண்டு இதனை வாசிப்பது காலத்தின் தேவையாகும்.

தந்தை பெரியார் மொழிபெயர்த்த சமதர்ம அறிக்கை
மார்க்ஸ் - எங்கெல்ஸ்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை, சென்னை- 600018
பக். 32  விலை: ரூ. 20/-
தொலைபேசி:
044 2433 2924

====ச.தமிழ்ச்செல்வன்====
 

;